New Updates! Fresh news just arrived.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்தும் தினம் இன்ற...

News

காணாமல் ஆக்கப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்தும் தினம் இன்று!

August 30, 2026 9:24 am
காணாமல் ஆக்கப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்தும் தினம் இன்று!
வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது மனித உரிமைகளுக்கு எதிரான மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான சர்வதேச சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும், உலகின் பல பகுதிகளில் இந்தப் பிரச்சினை தொடர்ந்து நிலவுவது கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சம்பவங்களுக்குச் சாட்சியமளிப்பவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பதும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் பெயரில் மனித உரிமைகள் பாதிக்கப்படுவதும் முக்கிய சவால்களாகக் குறிப்பிடப்படுகின்றன. மேலும், இத்தகைய குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாத நிலையும் சர்வதேச அளவில் தொடர்கிறது.

இந்தப் பிரச்சினை இலங்கையிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காலப்பகுதியில் காணாமல் போனதாகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகவும் கூறப்படும் பலரின் நிலைமை தொடர்பில் இதுவரை முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

இதன் காரணமாக, காணாமல் போன தமது உறவினர்களைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்வதற்காக அவர்களின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்கும் நோக்கில், 2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சட்டத்தின் கீழ் ‘காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்’ நிறுவப்பட்டது.

காணாமல் போனவர்களின் நிலைமை மற்றும் இருப்பிடம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, அவர்களின் குடும்பங்களுக்கு உரிய பதில்களை வழங்குவது இந்த அலுவலகத்தின் முக்கிய பொறுப்பாகும்.

அண்மையில் வெளியிடப்பட்ட தகவலொன்றில், காணாமல் போனவர்களில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும், அவர்களுடன் தொடர்புடைய முழுமையான விபரங்கள் இதுவரை பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது பாதிக்கப்பட்ட தனிநபர் மற்றும் குடும்பத்தை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சமூகத்திலும் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தும் ஒரு தீவிரமான மனித உரிமைப் பிரச்சினையாகும்.

எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி மற்றும் நியாயமான தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதே பரவலான எதிர்பார்ப்பாக உள்ளது.

பல ஆண்டுகளாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து காத்திருக்கும் குடும்பங்களுக்கு உண்மையும் நீதியும் கிடைப்பதே இந்தப் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வாக அமையும்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now