New Updates! Fresh news just arrived.

போக்குவரத்து பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்ப...

News

போக்குவரத்து பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயற்சி: இரு இளைஞர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

November 5, 2026 3:04 pm
போக்குவரத்து பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயற்சி: இரு இளைஞர்களுக்கு 14 நாட்கள்  விளக்கமறியல்!
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு இளைஞர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகிலுள்ள பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (03) இரவு சுமார் 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை இடைமறித்து சோதனையிட முற்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த இளைஞர்கள் பொலிஸார் மீது மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். எனினும், சுதாகரித்துக் கொண்ட பொலிஸார் இரு இளைஞர்களையும் காயமடைந்த நிலையில் கைது செய்ததுடன், அவர்களை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த இரு போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸாரினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் புதன்கிழமை (4) செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸாரை மோதி விபத்தினை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு இளைஞர்களையும் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் சுமார் 17 வயதுடையவர்கள் எனவும், சாரதி அனுமதிப்பத்திரமின்றி குறித்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கும்புறு மூலையில் அமைந்துள்ள சிறுவர் காப்பகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு வேளைகளில் தலைக்கவசம் அணியாமலும், சாரதி அனுமதிப்பத்திரமின்றியும் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள்களை எடுத்துச் செல்லும் சாரதி அனுமதிப்பத்திரம் பெறாத சிறுவர்கள், வீதிகளில் அதிவேகமாகச் செலுத்தி சாகசங்களில் ஈடுபடுவதுடன், இதனால் விபத்துகளும் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், பெற்றோர்களும் தமது பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now