New Updates! Fresh news just arrived.

தென் கொரியாவுடனான இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் உத்...

News

தென் கொரியாவுடனான இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் உத்தரவு!

August 17, 2026 7:05 am
தென் கொரியாவுடனான இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் உத்தரவு!
ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளில் தென் கொரியா பங்கேற்க மறுத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டுடன் நடத்தப்படும் கூட்டு இராணுவப் பயிற்சிகளின் அளவை கணிசமாகக் குறைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பென்டகனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இராணுவப் பயிற்சிகள் ஆரம்பிக்கவிருந்த நிலையில், ட்ரம்ப் தனது ‘Truth Social’ பதிவின் மூலம் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். பயிற்சிகளை முழுமையாக நிறுத்துவதற்கு அந்த நேரத்தில் தாமதமாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து நடத்தும் வருடாந்த ‘உல்சி ஃப்ரீடம் ஷீல்ட்’பயிற்சி ஆகஸ்ட் 17 முதல் 27ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 18,000 தென் கொரிய இராணுவத்தினர் பங்கேற்க உள்ளனர்.

வட கொரியாவின் இராணுவ திறன்கள் அதிகரித்து வரும் நிலையில், ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்வது, GPS சமிக்ஞைகளில் ஏற்படும் இடையூறுகளை சமாளிப்பது மற்றும் இணையவழித் தாக்குதல்களுக்கு பதிலளிப்பது போன்ற பல்வேறு விடயங்கள் பயிற்சியில் இடம்பெறவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் தனக்கு உள்ள நல்லுறவையும் ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த இராணுவப் பயிற்சிகள் அதிக செலவை ஏற்படுத்துவதுடன், வட கொரியாவுக்கு தேவையற்ற எதிர்மறையான சமிக்ஞையை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரான் தொடர்பான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளில் தென் கொரியா கொண்டுள்ள நிலைப்பாட்டையும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

ஈரானை அணுவாயுதமற்ற நாடாக மாற்றும் முயற்சியில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுமாறு தென் கொரிய ஜனாதிபதியிடம் தாம் கேட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்த பின்னணியிலேயே தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை குறைப்பதற்கான உத்தரவை அவர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now