New Updates! Fresh news just arrived.

அட்டப்பள்ளம் பாலத்தின் நிரந்தர நிர்மாணப் பணிகள் தொடர்பில்...

News

அட்டப்பள்ளம் பாலத்தின் நிரந்தர நிர்மாணப் பணிகள் தொடர்பில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி; அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதில்!

October 25, 2026 9:58 pm
அட்டப்பள்ளம் பாலத்தின் நிரந்தர நிர்மாணப் பணிகள் தொடர்பில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி; அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதில்!
கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள அட்டப்பள்ளம் பாலத்தை நிரந்தரமாக நிர்மாணிப்பதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களைக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை 23.10.2026 அன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

2024ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் அட்டப்பள்ளம் பாலம் கீழிறங்கி சேதமடைந்ததுடன் தற்போது அதற்கு அருகாமையில் அமைக்கப்பட்ட தற்காலிகப் பாலம் பாவனையில் உள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சேதமடைந்த 14 பாலங்களைச் சீன அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான பணிகள் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இப்பணிகளை 15 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும், நிதி தேடுதல், மதிப்பீடுகளைத் தயாரித்தல் மற்றும் பெரிய ஒப்பந்தக்காரர்களைத் தேடுதல் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அது தொடர்பில் அமைச்சர் பதிலளிக்கையில்,

கல்முனை – அக்கரைப்பற்று வீதியில் அமைந்துள்ள அட்டப்பள்ளம் பாலம் சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 15 பாலங்களை நிர்மாணிப்பதற்குச் சீனா நிதியுதவி வழங்கியுள்ளது.

இத்திட்டம் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அட்டப்பள்ளம் பாலத்தின் நிர்மாணப் பணிகளையும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் பணிகளை ஆரம்பிக்கும் காலத்தைத் தம்மால் தீர்மானிக்க முடியாது என்றும் அதனைச் சீன நிறுவனமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now