New Updates! Fresh news just arrived.

கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உற...

News

கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனவினால் அமைதியின்மை!

July 16, 2026 4:21 pm
கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனவினால் அமைதியின்மை!
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா ஏற்படுத்திய அமைதியின்மையின் காரணமாக, அரச அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று (16) காலை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டமானது நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினுடைய இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா, பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கல்வி, சுகாதாரம் மற்றும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு, விவசாயத் துறை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதன் போது, கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்த விவசாயச் செய்கையில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டினார்.

குறித்த குற்றம் சாட்டு தொடர்பில் கடுமையான விமர்சனக் கருத்துக்களினை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளினையும் மிக மோசமாக விமர்சித்தமையால் கூட்டத்தில் பெரும் அமைதியின்மையானது ஏற்பட்டது.

இதன்படி, அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் அனைவரும் மண்டபத்தினை விட்டு வெளியேறினர்.

அதிகாரிகள் இவ்வாறு பாதியிலேயே வெளியேறியமையால், குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டமானது எவ்வித முடிவுகளுமின்றி நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now