New Updates! Fresh news just arrived.

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபருக்கு கல்முனையில் சிறப்...

News

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபருக்கு கல்முனையில் சிறப்பான வரவேற்பு!

April 27, 2026 12:46 pm
அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபருக்கு கல்முனையில் சிறப்பான வரவேற்பு!
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகப் பதவியேற்றுள்ள திரு. அனுபம மங்கள விக்ரமாராச்சி அவர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு கல்முனையில் சிறப்பாக நடைபெற்றது.

கல்முனை முஹ்யித்தீன் ஜுமுஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வு, நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கல்முனை பிரதேச செயலாளர் அஷ்-ஷேக் டி. எம். எம். அன்சார், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ. டி. எம். ராபி, ஓய்வுபெற்ற முன்னாள் பிரதேச செயலாளர் ஏ. எம். நஸீர் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீத் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் முஹம்மது சமத், அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத் தலைவர் மௌலவி பி. எம். எம். ஜலீல் பாகவி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கல்முனைக் கிளைத் தலைவர் மௌலவி ஏ. எல். எம். முர்ஸித் முப்தி உள்ளிட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, கல்முனை மக்களின் சார்பில் அரசாங்க அதிபருக்கு கௌரவப் பொன்னாடை அணிவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

உரையாற்றிய அரசாங்க அதிபர் திரு. அனுபம மங்கள விக்ரமாராச்சி அவர்கள், “பன்முகத்தன்மை கொண்ட அம்பாறை மாவட்டத்தில் அனைத்து சமூகங்களுக்கும் சமமான, பாரபட்சமற்ற சேவையை வழங்குவதே எனது முக்கிய குறிக்கோள். கல்முனை மக்களின் இந்த அன்பான வரவேற்பு, எனது பணிகளை மேலும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்க ஊக்கமளிக்கிறது” என்று தெரிவித்தார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now