
காலிமுகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான முறைப்பாடு ஜூலை 19ஆம் திகதி மீளப்பெறும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. .
இதன்படி, குறித்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்,குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டமா அதிபரிடமிருந்து தமக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளதுடன் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், வழக்கை பிற்பகலில் அழைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை மாதம் 19ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.
சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளை ஏற்றுக்கொண்ட நீதவான், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சம்பவத்தில் சந்தேகநபர்களாக பெயரிடப்படாத ஏனையவர்களுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறும் உத்தரவிட்டார்.