
இன்று முதல் மருந்துகளின் விலை குறைக்கப்படும்.
இதன்படி, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கருத்தில் கொண்டு, பல சந்தர்ப்பங்களில் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை 97 வீதம் வரை உயர்த்துவதற்கு சுகாதார அமைச்சு முன்னர் அனுமதி வழங்கியிருந்த நிலையில் தற்போது 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கம் பின்பற்றும் தற்போதைய பொருளாதார ஸ்திரப்படுத்தல் வேலைத்திட்டத்தின் விளைவாக, ரூபாவின் வலுவடைந்ததை கருத்திற்கொண்டு, மருந்துகளின் விலைகளை குறைக்க அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, 60 வகை மருந்துகளின் விலை குறைக்கப்படும் புதிய விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பையும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளியிட்டுள்ளார்.
எனினும் சந்தையில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக மக்களும் மருந்தக உரிமையாளர்களும் தெரிவிக்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து வாங்கச் சென்றாலும், சில சமயங்களில் வெளி மருந்தகங்களில் மருந்துகளை வாங்கும்படி வைத்தியர்கள் கூறுவதாக மக்கள் தெரிவிப்பதோடு நீண்டகாலமாக நிலவும் மருந்து தட்டுப்பாடு முழுமையாக தீர்க்கப்படவில்லை எனவும் மருந்தக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.