
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜாவின் பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பாக தாம் வழங்கிய தீர்ப்புகளைத் தொடர்ந்து தனக்கு மரண அச்சுறுத்தல் வழங்கப்பட்டதன் காரணமாக பதவி விலகுவதாகக் குறிப்பிட்டு செப்டம்பர் 23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜா அனைத்து நீதித்துறை பதவிகளில் இருந்தும் தனது இராஜினாமாவை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரிடம் சமர்ப்பித்த பின்னர் சர்வணராஜா வெளிநாடு சென்றதாக நம்பப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த அச்சுறுத்தல்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது என்று மேற்கோள் காட்டி, இந்த விவகாரத்தில் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததோடு அறிக்கையில், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நீதித்துறையைப் பாதுகாப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளது.