
நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைவாக, துறைசார் நிபுணர்கள் குழுவொன்றின் பெயரிலான பணிக்குழுவை பெயரிட்டு அவர்களின் தகவல்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி, தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு அல்லது தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்தோடு, விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி, கைத்தொழில் உள்ளிட்ட பல துறைகளில் எதிர்கால அபிவிருத்திக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
மேலும், மொத்த தேசிய வருமானத்தில் இலங்கையின் கணனி தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழிநுட்பத்தின் வருடாந்த பங்களிப்பு 1.9 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் என குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், செயற்கை நுண்ணறிவு அல்லது தொழில்நுட்பம் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணத்தின் அளவு அடையாளம் காணப்படவில்லை என்றும், அதை அடையாளம் காண பயனுள்ள அமைப்பை தயார் செய்யுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.