
பாராளுமன்ற சட்ட சபை வினைத்திறனற்றதாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதன்படி, 21வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய அதிகாரிகளை நியமிக்க அரசியலமைப்பு சபை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நியமனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் இழுபறி காரணமாக அரசியலமைப்பு பேரவையினால் இதுவரை ஆணைக்குழுவின் பெயரை குறிப்பிட முடியவில்லை எனவும் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து நீக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டமை சுதந்திரத்தை பேணி, பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்த போது சரியான நேரத்தில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் சரியான நேரத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாமையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.