
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் இலங்கையின் அடுத்த அணுகுமுறை விரைவில் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டின் இலகுவான வர்த்தகம், வர்த்தக தரவரிசை மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் திறன் ஆகியவற்றில் இது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதோடு நுவரெலியா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று (03) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு உரையாற்றினார்.
“பொருளாதார மீட்சியின் செயல்பாட்டில் சட்ட அமைப்பு மற்றும் வணிக ஸ்திரத்தன்மையின் பங்கு” என்ற தொனிப்பொருளில் நேற்று நடைபெற்ற இந்த மாநாடு இன்று (04) நிறைவடைகின்றது.
மேலும், பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதற்கு எதிராக தற்போதுள்ள சட்ட கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை உடனடியாகக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இல்லையேல் இலங்கை மீண்டும் மூலோபாய குறைபாடுகளைக் கொண்ட நாடாக பட்டியலிடப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்ததுடன், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.
இதேவேளை, தேசிய கொள்கையொன்றின் படி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ரணில் விக்கிரமசிங்க, தேசிய கொள்கையொன்றை திட்டமிடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நினைவு கூர்ந்தார்.
இதன்படி, தேசியக் கொள்கையொன்றை வகுக்கும் விடயத்தில் அனைவருக்கும் இடையில் இணக்கப்பாட்டுக்கு வர முடியாவிட்டாலும், பல்வேறு விடயங்களில் பரந்த ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் கடந்த காலங்களில் பல அரசாங்கங்கள் தேசிய கொள்கைகளை புறக்கணித்ததன் காரணமாக நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த மாநாட்டில் சட்டத்துறை, கொள்கை வகுப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினரிடையே உரையாடல் ஆரம்பமாகுமென எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்ததுடன் ஒரு தேசமாக வளர்ச்சியடைவதற்கு, சட்டத்துறை தொழில்முனைவோரின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சுதந்திரமடைந்து 75 வருடங்களின் பின்னர் அபிவிருத்தியடைந்த இலங்கையின் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் முதல் தடவையாக காணப்படுவதாகவும், கொடூரமான யுத்தம் மற்றும் தவறான பொருளாதார முகாமைத்துவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும் கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டு எதிர்கால சவால்களை முறியடிக்க ஒன்றிணைந்து செயற்படுவதே தற்போது அனைவரினதும் பொறுப்பாகும் என தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த ஜயவர்தன, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்க்கக்கூடிய மற்றும் பாதுகாக்கக்கூடிய சூழலை உருவாக்குவது அவசியமாகும் என தெரிவித்தார்.
அத்தோடு, முதலீட்டுக்கான மிகவும் கவர்ச்சிகரமான இடமாக இலங்கை இப்போது பேசப்படுதாகவும் நாட்டில் முதலீடு செய்வதற்கான முதலீட்டாளர்களுக்கான வசதிகளை மேலும் விரிவுபடுத்துவது உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் சிங்கப்பூரின் கே.எல். கேட்ஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் சட்ட நிறுவனத்தின் தலைவர் எம். .ராஜாராம் சுட்டிக்காட்டினார்.