
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையை கருத்தில் கொண்டு உடவலவ மற்றும் யால பூங்காக்களை சுற்றுலா பயணிகள் வருவதினை தடுக்கும் வகையில் தற்காலிகமாக மூடுவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, வனஜீவராசிகள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்டுள்ளார்.
அத்தோடு, பொதுவாக ஏனைய வருடங்களில் உடவலவ மற்றும் யால பூங்காக்கள் செப்டெம்பர் மாதம் தற்காலிகமாக மூடப்படும் என வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
ஆனால் இம்முறை வறண்ட காலநிலை ஆரம்பமாகவுள்ளதால் குறித்த பூங்காக்களை மூடுமாறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், குறித்த பூங்காக்களின் தற்போதைய நிலைமையை மேலும் ஆய்வு செய்த பின்னர், சுமார் இரண்டு வாரங்களில் முடிவெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பூங்காக்கள் மூடப்படுவதனால் சுற்றுலாத்துறைக்கு சில பாதிப்புகள் ஏற்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த மாதம் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.