
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊழியர் அறக்கட்டளை நிதி ஆகியவற்றில் இருந்து அரசு பெற்ற கடனைக் குறைப்பதைத் தடுக்க உத்தரவிடக் கோரி நிறுவனங்களுக்கு இடையேயான ஊழியர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. .
இதன்படி, எஸ்.துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் குறித்த மனு பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா, நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்து, மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்யுமாறு பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
அத்தோடு, ஆரம்ப ஆட்சேபனைகளிலிருந்து, இந்த மனுவில் கோரப்பட்ட நிவாரணத்தை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறியதோடு உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணை ஜூன் 28ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதையடுத்து, அது பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாராளுமன்றமும் முறையான முறையில் பிரேரணையை நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இதன்படி, சட்ட மன்றத்தின் முன்வைக்கப்பட்ட விடயத்தை நீதிமன்றில் சவால் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, மேலதிகத் தகவல்களை வழங்கிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்த மனுவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களை மனுதாரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை எனவும் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நைஜல் ஹட்ச் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், இந்த மனுவை தாக்கல் செய்யும் போது கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
எனவே, அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் மனுதாரர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்ததோடு இரு தரப்பும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, பின்னர் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.
மேலும், நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம் அதன் செயலாளர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட ஆறு பேரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.