
யூ.கே. காலித்தீன், நூருல் ஹுதா உமர்
கட்சி பேதங்களுக்கு அப்பால் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ் மற்றும் அதாஉல்லா அகீயோர் இணைந்து சாய்ந்தமருதில் கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
இதன்படி, அன்மைக்காலமாக நாளுக்கு நாள் கடலரிப்பின் தாக்கம் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசத்தில் அதிகமான கடலரிப்பை சந்தித்துள்ள சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் (19/09/2023) திகதி பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சாய்ந்தமருது கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கான ஆரம்ப கட்ட வேலைகள் இன்று செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக் அவர்களின் நெறிப்படுத்தலில் கரையோரம் பேணல் திணைக்கள மாகாண பொறியியலாளர் எம். துளசி தாசனின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு வேலைத்திட்டதினை ஆரம்பித்து வைத்தனர்.
55 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்ட முதற்கட்ட வேலைத் திட்டத்தினை சாய்ந்தமருது பிரதேசத்தின் ஹஸனாத் பள்ளிவாசலுக்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ. எல். எம். சலீம் மற்றும் சாய்ந்தமருதினுடைய சுகாதார வைத்திய அதிகாரியான டாக்டர் எம்.ஜே. கே. எம். அர்சத் காரியப்பர், சாய்ந்தமருதின் பிரதேச செயலக நிர்வாக கிராம நிலதாரி ஏ.எம்.ஏ. நளீர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. நிஷார்தீன், சாய்ந்தமருது பிரதேச செயலக கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகளான ஏ.எம்.நுஸ்ரத் அலி, எச்.எம்.தானிஸ் முஹம்மட், சாய்ந்தமருது பிரதேச முக்கியஸ்தர்கள், மீனவ சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.