
இன்று (20) முதல் மின் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அத்தோடு, திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படுவதோடு எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் வ்ண்ணவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் வறண்ட காலநிலை நிலவிய மாதங்களில் அனல் மின் உற்பத்திக்கான செலவுகளை ஈடுகட்ட வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி, கடந்த மாதம், இலங்கை மின்சார சபை மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தது.
மேலும், இந்த ஆண்டு போதிய அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனதால், மின் உற்பத்திக்கு கூடுதல் செலவை அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஏற்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொது மேலாளர் நரேந்திர டி சில்வா தெரிவித்திருந்தார்.
அவரது கூற்றுப்படி, 4,500 ஜிகாவாட் மணிநேரம் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் 3,750 ஜிகாவாட் மணிநேரம் நீர் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இதன்மூலம், அனல் மின் நிலையங்களில் இருந்து கூடுதலாக 750 ஜிகாவாட் மணிநேரம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒக்டோபர் 18 அன்று, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உத்தேச மின் கட்டணத் திருத்தம் குறித்து BMICH வளாகத்தில் பொது மக்கள் மற்றும் இலங்கை மின்சாரசபையின் அதிகாரிகள் உட்பட மொத்தம் 30 தரப்பினரின் உள்ளீடுகளைச் சேகரிக்க ஆலோசனை நடத்தியது.
இதனால் இன்று முதல் மின்கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதுடன் திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூன் 30, 2024 ஆம் ஆண்டுவரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.