
நாடு முழுவதிலும் உள்ள 74 பாடசாலை கட்டிடங்கள் பாதுகாப்பற்ற கட்டிடங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த எச்சரித்துள்ளார்.
புதன்கிழமை (15) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அனைத்து அதிபர்களுக்கும் தமது பாடசாலை வளாகத்தினுள் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களின் நிலைமைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, குறித்த கட்டிடத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை வெளியேற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏதேனும் கட்டிடம் பாதுகாப்பற்றதாக காணப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். .
கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மற்றும் தங்காலை பாலிகா வித்தியாலய வளாகத்தில் பாழடைந்த கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் புதிய நிர்மாணங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், 2019 ஆம் ஆண்டு புதிய பாடசாலை கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கும் ஏற்கனவே இருந்த கட்டிடங்களை பராமரிப்பதற்கும் அரசாங்கம் நிதியளிப்பதை நிறுத்தியமையே பாடசாலைகளில் பாழடைந்த கட்டிடங்கள் காணப்படுவதற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.