
புதிய தாதியர்கள் 2519 பேரை சுகாதார சேவைக்கு உள்வாங்குவதற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று (17) காலை 9.00 மணிக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடாத்துவதற்கு சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, குறித்த இந்நிகழ்வானது அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதோடு சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன பங்கேற்கவுள்ளார்.
2018ஆம் ஆண்டு தாதியர் மாணவர் குழுவின் கீழ், 26.01.2020 அன்று தொடங்கப்பட்ட மூன்றாண்டு தாதியர் பயிற்சி வகுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த 2519 மாணவ தாதியர்கள் இன்று நியமனம் பெற உள்ளனர்.
மேலும், தரமான மற்றும் உகந்த நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணும் நோக்கில் நாடளாவிய ரீதியில் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் மாகாண சபையின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு இந்நியமனம் நடைபெறவுள்ளதோடு நியமனக் கடிதங்கள் 22.11.2023 முதல் அமுலில் உள்ள வகையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தற்போது நாடளாவிய ரீதியில் 42,000இற்கும் அதிகமான தாதியர்கள் சுகாதாரத் துறையில் கடமையாற்றுகின்ற நிலையில் மேலும் இந்த 2519 புதிய தாதியர்கள் இணைந்து கொள்வதன் மூலம் தாதிகளின் எண்ணிக்கை 45,000ஐ தாண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது நாடளாவிய ரீதியிலுள்ள 16 தாதியப் பயிற்சிப் பாடசாலைகளில் இருந்து 6500கும் அதிகமான தாதிய மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதோடு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்பு குறித்த குழுவும் நாட்டின் பராமரிப்பு சேவையில் இணைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.