
நேற்று இரவு யாழ்ப்பாணம் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பலில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மேலும், மியன்மார் பிரஜைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஆபத்தில் சிக்கியுள்ளதாக கடற்படை கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்து கடற்படையின் கப்பல்களைப் பயன்படுத்தி மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியான முறையில் கணக்கிடப்படவில்லை எனவும், உரியவர்கள் காங்கசந்துறைக்கு அழைத்து வரப்படுவதால், மீட்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு ஒன்று இவ்வாறு ஆபத்தில் சிக்கியதை முதலில் கண்டு கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்மை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வடகிழக்கு கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படுவதால் மீட்கப்பட்டவர்களை கரைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக இருக்கலாம் எனவும் பாதுகாப்பு தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.