
இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு இலங்கை ஒன்றிணைந்து தமது பங்களிப்பை வழங்குவது முக்கியமானது என வாஷிங்டனில் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து நடத்திய மாநாட்டில் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் இலங்கை பிரதிநிதிகளுடன் வெற்றிகரமாக கலந்துரையாடியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மேலும் தெரிவித்தார்.
மேலும், கடன் நிலைத்தன்மையை அடைவதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதாக்க நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் வெளிநாட்டுக் கடன் தொடர்பில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தமது உத்தியோகபூர்வ முடிவை நாளை அறிவிக்கவுள்ளதோடு அமெரிக்காவின் வாஷிங்டனில் குறித்த நாடுகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.