
இலங்கையில் நிலம் தொடர்பான தற்போதைய கட்டளைச்சட்டங்களை தற்போதைய அபிவிருத்தி தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பணிகளை விரைவுபடுத்துவதற்கு பொருத்தமான குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதோடு காணி முகாமைத்துவ நிறுவனங்களின் கட்டளைச்சட்டங்கள் திருத்தம் மற்றும் புதிய ஒழுங்குமுறைகளை உள்ளடக்குவது தொடர்பில் காணி அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த பணிப்புரையினை வழங்கியுள்ளார். .
அத்தோடு, காலனித்துவ காலத்தில் கொண்டு வரப்பட்ட காணி கொள்கைகளே தற்போதும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காணி பாவனை தொடர்பில் பல்வேறு காலகட்டங்களில் கொண்டுவரப்பட்ட கட்டளைச்சட்டங்கள் தற்போதைய அபிவிருத்தித் தேவைகளுக்கு இணங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காணி வழங்குவதில் நிலவும் தடைகளை நீக்கி புதிய தேசிய காணி கொள்கையை தயாரிப்பது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், மாகாண சபைகளுக்கு உட்பட்ட காணிகளின் பிரச்சினைகளை காணி ஆணைக்குழுவின் ஊடாக தீர்த்து வைப்பதற்கும், கிராமசேவ கள மட்டத்தில் உள்ள காணிகளின் உரிமையாளர்களின் விபரங்கள் மற்றும் தொகையை இனங்கண்டு பிரதேச செயலக மட்டத்தில் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட நிலம் மற்றும் பயன்படுத்தப்படாத நிலத்தின் அளவு குறித்து ஜனாதிபதியினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அத்தோடு, அரசாங்கத் தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மக்களிடையே மீளப் பகிர்ந்தளித்து எதிர்காலத்தில் அந்தந்த காணிகளின் சந்தைப் பெறுமதியை செலுத்தி அரச தேவைகளுக்காக காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
இதேவேளை, நில அளவைத் திணைக்களம் மற்றும் மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பணிகளில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், அந்தத் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதோடு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளர் கே. டி. என். ரஞ்சித் அசோக, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பி.பி ஹேரத், வன வளங்கள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.சி.எம். ஹெராத், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர், யு.டி.சி. ஜயலால், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தென்மாகாண பிரதம செயலாளர், வடமத்திய மாகாண பிரதம செயலாளர் ஆகியோர் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.