
கொழும்புப் பல்கலைக்கழகம் 10 வருட அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால், உலகம் முழுவதுமே செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியுடன் அறிவுப் புரட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். .
இதன்படி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2023 பட்டதாரிகளின் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளதோடு கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தின் 40 ஆண்டு நிறைவை ஒட்டி, சிகரம் விருது வழங்கும் விழாவும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்தோடு, நாடு, சமூகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தனித்துவமான பணியை ஆற்றிய முன்னாள் மாணவர்களை குறிக்கும் வகையில் வழங்கப்படும் முதலாவது விருது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வணக்கத்திற்குரிய அனுநாயக்க திம்புல்கும்புரே விமலதம்ம தேரரும் குறித்த விழாவில் கௌரவிக்கப்பட்டார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பேராசிரியர் தேஷ்மான்ய ஜே.பி. திசாநாயக்க மற்றும் திலக் கருணாரத்ன உள்ளிட்ட 11 பேர் இவ்விருதை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முழு பல்கலைக்கழக அமைப்பிலும் புதுமையின் தேவை உள்ளதாகவும் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை காணுமாறும் ஜனாதிபதி கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த 10 வருட அபிவிருத்தித் திட்டத்தை விரைவில் தயாரிப்பதற்கு தங்களை அர்ப்பணிக்குமாறு முன்னாள் மாணவர்களிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி.ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறு செய்யாவிட்டால், அந்த தனித்துவமான செயற்பாட்டிற்கு பங்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு, இந்நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எச்.டி.கருணாரத்ன, ஆதி வித்யார்தெய்ன் சங்கத்தின் தலைவர் ஜே.எம்.எஸ்.பண்டார ஆகியோர் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.