
கிரநாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுகெஹின்ன பகுதியில் லொறியில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கிரநாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சந்தேக நபரை கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிரநாகம பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதோடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேகத்திற்குரிய பொலிஸ் உத்தியோகத்தர் இதுவரை பணிக்கு சமூகமளிக்கவில்லை என கிரநாகம பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சந்தேகத்திற்குரிய பொலிஸ் உத்தியோகத்தர் ஹலவத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார் எனவும் பல மாதங்களாக அவர் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் சந்தேக நபர் சேவையை விட்டு விலகியுள்ளதாக கருதப்படுவதாகவும் கிரநாகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு, குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்காக 02 மோட்டார் சைக்கிள்களில் நான்கு பேர் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.