
இந்த வருடம் நெற்செய்கைக்கான உரங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட வவுச்சரில் இருந்து கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் எந்தவொரு உர வகையையும் கட்டாயமாக்கவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 30 சதவீத கரிம உரங்களும் 70 சதவீத இரசாயன உரங்களும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் பலர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த நிலையில் குறித்த அறிக்கைகளில் உண்மையில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, இவ்வருடம் உரங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் மானியமாக வழங்கும் வவுச்சர்களைக் கொண்டு விவசாயிகள் விருப்பத்திற்கு ஏற்ப இரசாயன உரங்கள் அல்லது இயற்கை உரங்களை கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் பருவத்தில் 70 சதவீத இரசாயன உரங்களும் 30 சதவீத கரிம உரங்களும் பரிந்துரைக்கப்படவில்லை என அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் உரம் பெறுவதில் விவசாயிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.