
ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி இன்று இந்தியா செல்லவுள்ளார்.
இது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக உள்ளதோடு அவர் தனது ஆசிய மற்றும் ஆப்பிரிக்க பிராந்திய சுற்றுப்பயணத்துடன் இந்தியா வர உள்ளார்.
வெளிவிவகார அமைச்சரின் விஜயம் குறித்த தகவலை இந்தியாவில் உள்ள ஜப்பானிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ,ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் போது, இந்தியா வெளிவிவகார அமைச்சர் உட்பட நாட்டின் உயர்மட்ட இராஜதந்திர அதிகாரிகள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன் குளோபல் சவுத் எனப்படும் நாடுகளின் குழுவுடனான உறவுகள் அங்கு வலுப்படுத்தப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும் இந்தியாவில் தங்கியுள்ள பின்னணியில் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருவதானது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இதேவேளை, ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தது.
குறித்த நிலையில் இந்தியா விஜயத்தில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து 24 பேர் கொண்ட தூதுக்குழுவொன்று செல்லவுள்ளதாக ஜப்பானில் உள்ள இலங்கை தூதரக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளதுடன் இலங்கையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் குறித்த விஜயத்தின் நோக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.