
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி போல் நடித்து, வாக்குமூலம் பெறுவதற்காக ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்ற போது கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் 05 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, சந்தேகநபர் ஹட்டன் பதில் நீதவான் எஸ்.பார்த்திபன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
அத்தோடு, ஹட்டன் திம்புலபத்தனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்பொலிஸ் கான்ஸ்டபிள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 28 ஆம் திகதி ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பிரதான தமிழ் பாடசாலை ஒன்றிற்குச் சென்று அதிபரிடம் தான் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி எனவும் குறித்த பாடசாலை மாணவி ஒருவரிடம் வாக்குமூலம் பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர், குறித்த மாணவியை சந்தித்த சந்தேகநபர் நுவரெலியா விசேட புலனாய்வுப் பிரிவுக்கு வந்து வாக்குமூலம் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டதுடன், அவரது தொலைபேசி இலக்கமும் மாணவியிடம் வழங்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, குறித்த மாணவியின் தந்தை சந்தேகநபர் வழங்கிய தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, உரிய வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக தனது வீட்டிற்கு வருமாறு தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, மாணவியின் வீட்டிற்கு வந்த சந்தேக நபர் மீது சந்தேகம் அடைந்த மனைவியின் பெற்றோர், நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உபாலி ஜயசிங்கவிற்கு அறிவித்துள்ளனர்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொலைபேசி ஊடாக இது தொடர்பான தகவல்களைக் கேட்டு, சந்தேகநபரான அதிகாரிக்கு அழைப்பை வழங்குமாறு கூறியதாகவும் சந்தேக நபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரியல்ல என்பதை உணர்ந்த பிரதி பொலிஸ் மா அதிபர், சம்பவ இடத்திற்கு ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகள் வரும் வரை சந்தேக நபரை தடுத்து வைக்குமாறு மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபரை பிரதி பொலிஸ் மா அதிபர் கைது செய்துள்ளார்.
மேலும், சந்தேகத்திற்குரிய பொலிஸ்த்தியோகத்தர் உறவை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த மாணவியை சந்திக்க முயற்சித்ததாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.