
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (IMF/EFF) திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், அரசியல் கட்சிகள் தங்கள் நாட்டுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை முடிவெடுக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன் புதிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் முறைக்கான விதிமுறைகளை அமைச்சரவை நிறைவேற்றியதையடுத்து, பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் ஜூன் 1 ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.