
75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட விசேட நினைவு நாணயம் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
மேலும், நினைவு முத்திரை ஊடக, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், நினைவு நாணயம் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
அத்தோடு, பாரம்பரியமாக தபால் திணைக்களம் கடைப்பிடித்து வரும் நடவடிக்கைகளுக்கு அமைவாக 50 ரூபா பெறுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நினைவு முத்திரையும் முதல் நாள் அட்டையும் இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் உப தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், ஆயிரம் ரூபா பெறுமதியான 75 ஆவது சுதந்திர தின நினைவு நாணயம் புழக்கத்திற்குரியதல்ல எனவும், இது இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 71 ஆவது நினைவு நாணயம் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.