
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி, நீதிமன்றில் சாட்சியமளித்ததுடன், வழக்குக்கு தொடர்பில்லாத வெளி தரப்பினர் வந்து தமது கட்சிக்காரருக்கு பயணத்தடை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வழக்கில் சம்பந்தப்படாத வெளி தரப்பினர் இவ்வாறான உத்தரவைப் பெற முடியாது என்பதால் வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த கோரிக்கைக்கு அரச தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் சமகி ஜன்பலவேகவின் பொதுச் செயலாளர் ஆகியோர் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், இந்தக் கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 15ஆம் திகதி வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். அதுவரை பயணத்தடை நீடிக்கப்படும் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.