
தலதா மாளிகையினை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக வலைத்தள செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்கவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தர்ஷன குருப்பு, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன், சந்தேகநபர் தாம் கூறிய கருத்துக்காக பகிரங்க மன்னிப்புக் கோர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து சட்டமா அதிபருக்கு அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, சந்தேக நபரின் குரல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், அதற்காக சந்தேக நபரை அரச பரிசோதகர் திணைக்களத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி அரசாங்க பரிசோதகர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
மேலும், இதனையடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.