
பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தரகர் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த கிராம உத்தியோகத்தர்கள் இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு தரகரை, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் உத்தரவிட்டார்.
மேலும், குறித்த சந்தேக நபர் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு தரகர் அடையாள அணிவகுப்பில் ஆஜராகியமை தொடர்பான உண்மைகளை பரிசீலிப்பதற்காக அவரது அலுவலகத்திற்கு அழைத்து வருமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட தரகர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளதோடு சந்தேகநபர் இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.