
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டத்தரணிகளான பிரியலால் சிறிசேன, விஜித குமார மற்றும் இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நோட்டீஸ் வழங்கினார்.
அத்தோடு, இந்த வழக்கு தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப்பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், குறித்த காணொளி இதுவரை கிடைக்கப்பெறவில்லை என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த வழக்கின் அடிப்படையாக உள்ள பிரதிவாதியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, தாம் உரிய அறிக்கையை வழங்கியதாக ஒப்புக்கொள்ளாவிடின், அவரிடம் குரல் பரிசோதனை நடத்த அனுமதிக்குமாறும் அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.
மேலும், இராஜாங்க அமைச்சர்சனத் நிஷாந்த சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான பயிஸ் முஸ்தபா மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் அந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், தற்போது முறைப்பாட்டிற்கு பொறுப்பாக உள்ள பல்வேறு ஊடக நிறுவனங்களில் இருந்து அழைக்கப்பட்ட காணொளிகளை அரசாங்க பரிசோதகர் திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க சட்டத்தரணிக்கு நீதிமன்றம் அறிவித்ததுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விசாரிக்க இது தொடர்பான புகாரை மார்ச் 28 ஆம் திகதி மீண்டும் அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.