
இவ்வருடம் நெற்பயிர்ச் செய்கைக்கான MOP உரத்தின் விலையை 4500 ரூபாவினால் குறைக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, அண்மையில் கூடிய அமைச்சரவையில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தற்போது சந்தையில் 50 கிலோ கிராம் MOP உர மூட்டை 18,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதால் அதனை விவசாயிகள் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளதுடன் குறைந்த விலையில் உரம் வழங்கும் வகையில் அரசுக்கு சொந்தமான இரு உர நிறுவனங்களும் செயல்பட்டு வருவதால், ரசாயன உர விற்பனையில் சந்தையில் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த பருவத்தில், 42 ஆயிரம் ரூபாயாக இருந்த யூரியா உர மூட்டை, 11,000 ரூபாயாக குறைந்துள்ளதால், விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், யூரியா உரத்தின் விலை குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் TSP (மண் உரம்) மற்றும் MOP உரம் ஆகியவற்றின் விலைகளும் குறையும் என தனியார் துறை உர விற்பனையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கடந்த காலங்களில் உரங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் 06 தனியார் நிறுவனங்களே நாட்டில் இருந்தன. ஆனால் தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்து விநியோகிக்கும் உர நிறுவனங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்த போட்டியின் அனுகூலத்தை விவசாயிகளுக்கு வழங்குமாறு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.