
மஹரகம பிரதேசத்தில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து குடியிருப்பாளர்களை பயமுறுத்தி தங்கத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களால் உருக்கி தயார் செய்யப்பட்ட 80 கிராம் மற்றும் 56 கிராம் நிறையுடைய இரண்டு தங்கத் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பேலியகொட, மாளிகாவத்தை, கஹதுடுவ, கட்டுநாயக்க, மஹாபாகே, கட்டான, மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பேலியகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர் பேலியகொட மீன் வர்த்தக வளாகத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, சந்தேகநபரால் திருடப்பட்ட இரண்டு முச்சக்கரவண்டிகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், எட்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றை உடைத்து 38 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்களை திருடிய இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அத்தோடு, சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 6 கிராம் 253 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.