
துறைமுகம், எண்ணெய், மின்சாரம், வங்கிகள் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக முன்னதாக அறிவித்திருந்த போதிலும், மருத்துவ, இரயில்வே, ஆசிரியர்கள், தபால் தொழிற்சங்கங்கள் இணைந்துகொள்ளவில்லை எனவும் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மாத்திரமே தாங்கள் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்ததோடு நாட்டின் பல பகுதிகளில் அரச வங்கிகள் மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்
மேலும், துறைமுக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பினால் இன்று காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கை நாளை காலை 07 மணி வரை தொடரும் என தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.
அத்தோடு, அகில இலங்கை தாதியர் சங்கம் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை சேவையில் ஈடுபடவில்லை.இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியதாகவும் தெரியவருகின்றது.
இதன்படி, அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் நிறுவன ஊழியர்களும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இன்றைய தொழில் நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவம் வழங்குமாறு தமது கட்சியின் தொழிற்சங்கங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று மதிய உணவு நேரத்தின் போது மருதானை ரயில்வே தலைமையகத்திற்கு பல நிறுவனங்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
எவ்வாறாயினும், இன்றைய வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்கள் வெற்றியளிக்கவில்லை என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.