
ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க 33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, 7,500 கல்லூரி ஆசிரியர்களின் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களம் தேசிய கல்வி நிறுவகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுடன், அவர்கள் இம்மாத இறுதியில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மாகாண மட்டத்தில் 26,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், 53,000 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு குறித்தப் பரீட்சை முடிந்து இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிப்பதுடன் மாகாண மட்டத்தில் அவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆசிரியர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில், வரும் மே மாதத்திற்குள் 33 ஆயிரம் புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் விஞ்ஞானம், ஆங்கிலம், கணிதம், தொழிநுட்பம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் மாணவர்களை அவர்களுக்காக இணைத்துக் கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.