
தெற்கு அதிவேக வீதியின் 23.1 கிலோமீற்றர் களுத்துறை வடக்கு பல்பொல பகுதியில் நேற்று இரவு சொகுசு பயணிகள் பஸ் ஒன்றும் கண்டெய்னர் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பேருந்தின் நடத்துனரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, விபத்தின் போது, பேருந்தில் 38 பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, காலி பிரதேசத்தில் இருந்து நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய நோக்கி டயர்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் மாத்தறையிலிருந்து மகும்புர நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் பின்னால் வந்து மோதியதாக பொலிஸார் தெரிவித்த்துள்ளனர்.
மேலும்,இவ்விபத்து இரவு 10.10 மணியளவில் இடம்பெற்றதுடன், விபத்து தொடர்பில் 1969 அதிவேக வீதி கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பின் பேரில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து கலனிகம பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தீயணைப்பு மற்றும் உயிர்காப்பு பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததோடு சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய குழுவினருக்கு ஸ்தலத்திலேயே அடிப்படை சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்தின் போது, பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவர் கோபமடைந்து கண்டெய்னர் ட்ரக் ஓட்டுநரை தாக்கியதோடு மேலும் அவர் மற்றவர்களாலும் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, விபத்தில் காயமடைந்த நடத்துனரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய பயணிகளில் பெரும்பாலானவர்களின் முகம், வாய் மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தீயணைப்பு மற்றும் உயிர்காப்பு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், பஸ் சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.