
திட்டமிட்டபடி நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், வேலைநிறுத்தத்தை இடைநிறுத்துவதற்கான பதில் இதுவரை அரசாங்கத்திடம் கிடைக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தல், மின் கட்டணத்தைக் குறைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தொடரூந்து தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள் நிலையில், தொடரூந்து ஊழியர்களின் விடுமுறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய தொடரூந்து பொது முகாமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம், புகையிரத கட்டுப்பாட்டாளர் சங்கம், உள்ளிட்ட பல புகையிரத தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர கருத்து தெரிவித்தார்.
இதேவேளை, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களும் நாளை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில் நாளைய தினம் நடைபெறவிருந்த தரம் 09, 10 மற்றும் 11 ஆம் ஆண்டுகளுக்கான தவணைப் பரீட்சைகளை பிற்போடுவதற்கு மேல் மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் மார்ச் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிராந்திய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்தார்.
அதன்படி நாளை நடைபெறவிருந்த தரம் 09, கணிதம், சிங்களம் மற்றும் தமிழ் பாடங்கள் மார்ச் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு நாளை நடைபெறவிருந்த கலை, இசை, நடனம், நாடகம் மற்றும் நாடகக் கலைகள் மற்றும் சிங்களம், ஆங்கிலம், தமிழ் மற்றும் இலக்கிய பொழுதுபோக்கு பாடங்கள் மார்ச் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளன.
மேலும்,, நாளை நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளையும் ஒத்திவைக்க மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.