
களுத்துறை உள்ளூராட்சி சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், உள்ளூராட்சி சபைக்கு புதிய லங்கா சுதந்திரக் கட்சி சமர்ப்பித்த வேட்பு மனுவை நிராகரித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, பிரிதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.
அத்தோடு, மனுதாரர் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் டபிள்யூ.டி.வராகொட சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி விரான் கோரயா, வேட்பு மனுவுடன் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசி ஒன்றில் சமாதான நீதவானின் உத்தியோகபூர்வ முத்திரை இல்லாமையினால் தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்புமனுவை நிராகரித்து விட்டார் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வேட்புமனுவுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய சத்தியக் கடதாசிகள் உரிய உத்தியோகபூர்வ முத்திரையைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, தனது கட்சிக்காரரின் வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டினார்.
மேலும், முன்வைக்கப்பட்ட விடையங்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுவை விசாரிக்க அனுமதித்தது.
இதன்படி, மனு விசாரணையை மே 12ஆம் திகதி நடத்த தீர்மானித்ததோடு உச்ச நீதிமன்ற அமர்வு, மனு விசாரணை முடியும் வரை களுத்துறை உள்ளூராட்சி சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.