
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
மேலும், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் கொலன்னாவ முனையத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பெற்றோலிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சில ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் கொலன்னாவ முனையத்தில் உள்ள எரிபொருள் விநியோக நிலையங்களுக்குள் அனுமதியின்றி நுழைந்து அவர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, குறித்த காழ்ப்புணர்வைத் தடுக்கவும், சேவைப் பகுதி மற்றும் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமைச்சகம் மற்றும் அனைத்து நிறுவனங்களும் செயல்பட்டு வருவதாகவும், தொழிற்சங்கத்திடமிருந்து நஷ்டத்தை வசூலிக்க தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் பெற்றோலிய விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட நாசகார குழு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.
இதன்படி, எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக நிலையங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நீதிமன்ற உத்தரவுகளை பெற்றுக்கொள்வதற்கு தலையிடுமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.