
நாட்டின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் முன்னணி பாதாள உலகக் குற்றவாளிகளான “ஹரக் கட்டா” எனப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்ன மற்றும் “குடு சாலிடு” எனப்படும் சலிந்து மல்ஷித குணரத்ன ஆகியோர் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மடகாஸ்கரில் உள்ள இவாடோ சர்வதேச விமான நிலையத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டதாக மடகாஸ்கரின் முன்னணி ஊடக வலையமைப்பான L’EXPRESS தெரிவித்துள்ளது.
இதன்படி, இவர்களில் ஹரக் கட்டாவின் மனைவி எனக் கூறும் மலேசியப் பெண்ணும் அடங்குவதாகக் கூறப்படுகின்றது.
அத்தோடு, ஐந்து பேர் பெப்ரவரி 12 அன்று நாட்டின் Nosy Be சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் ஜெட் விமானத்தில் வந்ததாக கூறப்படுவதோடு L’EXPRESS இணையதளத்தின் அறிக்கையின்படி, மார்ச் 1ஆம் திகதி ஹரக் கட்டா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாகக் தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நேரத்தில், ஹரக் கட்டா ஒரு பணக்கார தொழிலதிபர் போல் நடித்ததாகவும் ஹரக் கட்டாவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலராக குடு சாலிந்துநடித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, இலங்கை நீதிமன்றங்களில் இருந்து பெறப்பட்ட உத்தரவுகள் மற்றும் பொலிஸ் அறிக்கைகளின் பிரகாரம் ஹரக் கட்டா உள்ளிட்ட பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
இதன்படி, சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பின் பிரகாரம், மடகாஸ்கர் பாதுகாப்புப் படையினர் ஹர்க் கட்டாவை மட்டும் தெளிவாக அடையாளம் கண்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் குடு சலிந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹரக் கட்டா மற்றும் குழுவினர் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து இரண்டு சொகுசு கார்களில் இவாடோ விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதோடு அந்த நேரத்தில், அதிகாரிகள் மடகாஸ்கர் உள்ளூர் நாணயத்தில் 38 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மனைவி என சந்தேகிக்கும் பெண்ணின் வசம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி, துபாய், மலேசியா, சிங்கப்பூர், சீஷெல்ஸ், மாலைத்தீவு மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்கு ஹரக் கட்டா போதைப்பொருள் விநியோகம் செய்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிப்பதோடு ஹரக் கட்டா உள்ளிட்டோர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஏனைய சந்தேக நபர்களில் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்களும் இருப்பதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.