
ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள பிரபலமான மில்டன் கீன்ஸ் மாநகர சபை முதல்வர்கள் தத்தமது பதவி காலத்தில் அம் மாநகரத்தில் வாழ்ந்து சமூக மேம்பாட்டுக்கு அதி சிறந்த பங்களிப்புக்களை செய்து முன்னுதாரண புருஷர்களாய் பல்வேறு துறைகளில் திகழும் ஆளுமைகளை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநகர முதல்வர் விருது வழங்கி கௌரவித்து வருகிறார்கள்.
அவ்வகையில் , 2022 ஆம் ஆண்டுக்கான மில்டன் கீன்ஸ் மாநகரத்தின் தற்போதைய முதல்வர்
முஹம்மட் கான் அவர்கள் , இளம் பாடசாலை மாணவர் பிரிவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாய்ந்தமருதை பூர்விகமாக கொண்ட பத்து வயதே உடைய மர்யம் ஜெஸீமின்
அல்குர் ஆன் முறத்தல் மற்றும் பொது மேடை பேச்சாற்றல் அடங்கலாக சமூக வலைத்தளங்கள் மூலம் தனது மார்க்கத்தை பரப்பும் ஆற்றல்கள் மற்றும் தொடர்ச்சியான பங்களிப்புக்களை பாராட்டி அவற்றின் அங்கீகாரமாக முதல்வரின் “இளம் சாதனை வீராங்கனை” விருதை வழங்கி கௌரவித்து உள்ளார் . இதன் மூலம், இளம் பாடசாலை மாணவர் பிரிவில் இவ்வாண்டின் மில்டன் கீன்ஸ் மாநகர முதல்வர் விருது பெற தெரிவான ஒரேயொரு இளம்சாதனையாளராகவும் , இலங்கையை பூர்விகமாக கொண்டு இவ்விருதை வென்ற முதலாவது நபராகவும் மில்டன் கீன்ஸ் மாநகர சபையில் வரலாற்றில் தடம் பதிக்கிறார் .
இவருக்கான விருது வழங்கும் விழா கடந்த வியாழக்கிழமை (12/05/2022 ) மில்டன் கீன்ஸ் மாநகர கேட்போர் கூடத்தில் நடை பெற்றது .
மாநகர முதல்வரும் கவுன்சிலருமான முஹம்மட் கான் தலைமையில் நடைபெற்ற மாநகர விருது வழங்கும் விழாவில் விசேட அதிதிகளாக எலிசபெத் மகாராணியாரின் பக்கிங்ஹாம்ஷையர் மாநிலத்து பிரபுக்கள் சபையின் லெப்டினன்ட் லார்ட் கௌண்டஸ் ஹொவ் மற்றும் மில்டன் கீன்ஸ் தெற்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பிரயக்ஷா ஹெக்டே ஆகியோர் உட்பட மாநகர சபை உத்தியோகத்தர்கள் ,இதர வெற்றியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
விசேட அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்ட மில்டன் கீன்ஸ் தெற்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பிரயக்ஷா ஹெக்டே , இளம் சாதனையாளர் விருது பெற தகுதி பெற காரணமான மர்யம் ஜெஸீமின் சாதனைகளை குறிப்பிட்டு கூறுகையில் ஐக்கிய ராஜ்யத்தின் “பிராக்ஸிட்” கொள்கைக்கு எதிராக பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதி அவரிடமிருந்து பதிலை பெற்றதை தவிர்த்து 10 வயதே உடைய மர்யம் ஜெஸீம் ஆன்மிகம் ,அரசியல் ,அரபு எழுத்தணி , கலை , கலாச்சாரம் , தன்னார்வ தொண்டு சேவைகள் என பல்வேறு துறைகளில் முன்னுதாரணமாக இருந்து தொடர்ச்சியாக பங்களிப்பு செய்து அதன் மூலம் அடைந்து வரும் தேசிய மற்றும் சர்வதேச சாதனைகள் அபாரமானவை. அவற்றை மேலும் தொடர வேண்டும் என வாழ்த்தியும் பாராட்டுக்களை தெரிவித்திருந்ததுடன் அரங்கில் பிரசன்னமானோரின் கரகோசத்துக்கு மத்தியில் எலிசபெத் மகாராணியாரின் பக்கிங்ஹாம்ஷையர் மாநிலத்து பிரபுக்கள் சபையின் லெப்டினன்ட் லார்ட் கௌண்டஸ் ஹொவ் பிரசன்னத்தில் மர்யம் ஜெஸீம் மாநகர முதல்வர் முஹம்மட் கானிடமிருந்து தனக்குரிய விருதை பெற்றுக் கொண்டார் .
கோவிட் பெரும் தொற்று நோய் ஏற்பட்டு பாடசாலைகள் கல்வி செயட்பாடுகள் ஸதம்பிக்கப்பட்டதிலிருந்து பாடசாலை கல்வியையும் அல் குர்ஆன் மத்ரஸா கல்வியையும் இடை நிறுத்தி தனது தந்தையின் வழி காட்டல் மூலம் குடிமனை கல்வி (Home Schooling) மூலம் தனது கல்வி மற்றும் பிற பாடவிதான செயற்பாடுகளைமேற்கொண்டு வரும் மாணவியாக இருந்து இவ்விருதை பெற்றிருப்பதை நிகழ்வில் கலந்து கொண்ட இதர வெற்றியாளர்களும் அதிதிகளும் அறிந்து, ஆச்சரியப்பட்டு மர்யம் ஜெஸீமை ஆரத்தத்தழுவி தங்களது பாராட்டுக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
விசேட அதிதியாக கலந்து கொண்ட எலிசபெத் மகாராணியர் அவர்களின் பக்கிங்ஹாம்ஷையர் மாநிலத்து பிரபுக்கள் சபையின் லெப்டினன்ட் லார்ட் கௌண்டஸ் ஹொவ் அவர்களும் விசேட கவனம் எடுத்து கல்வி மற்றும் குடிமனை கல்வி அனுபவங்கள் மற்றும் அடைவுகள் பற்றியும் மர்யத்திடம் பிரேத்தியேகமாக கலந்துரையாடி பாராட்டியமை விழாவில் விசேட அம்சமாகவும் இருந்தது .
இது தவிர விருது வழங்கல் நிகழ்ச்சி முடிவில் மர்யம் ஜெஸீம் மாநகர முதல்வர் முஹம்மட் கான் அவர்கள் தனது உத்தியோக பூர்வ காரியாலயம் மற்றும் மாநகர சபை செயற்பாடு தளங்களை சுற்றி காண்பித்ததுடன் மட்டுமல்லாது மர்யம் ஜெஸீம் ஐ சிறப்பு நேர்காணல் ஒன்றையும் செய்திருந்தார் .
மர்யம் ஜெஸீமின் இவ்வரிய சாதனை மில்டன் கீன்ஸ் மாநகர முதல்வர் விருது குறிப்பு புத்தகத்திலும் பதியப்பட்டு வரலாற்று ஆவணமாக திகழவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது .
பல் துறைகளில் பிரகாசித்து பல்வேறு விருதுகளை வென்று வரும் மர்யம் ஜெஸீம் கடந்த 2020 ஆம் ஆண்டில் ‘’சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை’’ 41வது கூட்டத் தொடரில் அதி குறைந்த வயதில் இணையம் வழியாக தற் துணிவோடு பங்கேற்றமைக்காக சர்வதேச ஐக்கிய நாடுகள் சபை அமர்வின் தவிசாளர் மற்றும் பிரதிநிதிகளால் வாய்மொழிபாராட்டு விருதை (Verbal Commendation Award) வென்றதுடன் சர்வதேச ஐக்கிய நாடுகளின் மாதிரி பாராளுமன்றத்தி்ன் பிரமுகர் அங்கத்துவத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .
இப்படி பல சாதனைகளை சாதித்து வரும் வரும் சிறுமியான மர்யம் ஜெஸீம் இன் பெற்றோர்கள் இலங்கையின் சாய்ந்தமருதை சேர்ந்தவர்கள்.
மர்யம் ஜெஸீம் இன் தாயார், சாய்ந்த மருதை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் எம் ஏ எம் முஸ்தபா மற்றும் சல்ஹா பீபியின் கனிஷ்ட புதல்வியான ஸாதிகா (ஷிரீன் ) ஆவார். இவர் தற்போது புதிய திருமண பந்தத்தில் இணைந்து வாழ்ந்து வருகிறார் .
சாய்ந்தமருதை சேர்ந்த இவரது தந்தையார் ஜெஸீம், மர்ஹூம் அப்துல் ஹமீது (ராசாத் தம்பி ) மற்றும் ரஹ்மத் பீபியின் புதல்வராவர் .
தற்போது மர்யம் ஜெஸீம் , தாய் விட்டுச் சென்றதிலிருந்து தந்தையின் அரவணைப்பில் கடந்த ஆறு வருட காலமாக இங்கிலாந்தில் வசித்து வருகையில் மேற்கூறிய சாதனைகளை சாதித்து வருகிறார்.
மர்யம் ஜெஸீம் அவர்களை நாமும் வாழ்த்துவோம்!